நாட்டை வழமைக்கு கொண்டு வர மேலும் 6 மாதங்களாகும்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 05-08-2022 | 7:33 PM

Colombo (News 1st) நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கு மேலும் ஆறு மாதங்கள் செல்லும் என்பதனால், அதுவரை கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

முதலில் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு செல்ல வேண்டும் எனவும் மாற்றுத் திட்டம் தொடர்பில் பேசுபவர்கள் அதனை முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். 

பாரதூரமான நோய்களுக்கான சிகிச்சை அவ்வளவு இலகுவானதல்ல என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயணிக்க வேண்டிய பாதை தெரியும் என்பதால்,  நிலையான கடனுக்கு இணங்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார். 

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

'Let's reset Srilanka' என்ற பெயரில் Advocata நிறுவனம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பிலான ஆய்வு அறிக்கை இதன்போது வௌியிட்டு வைக்கப்பட்டது. 

நிபுணர்கள் பலரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.