எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த இருவர் உயிரிழப்பு

24 மணித்தியாலங்களில் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த இருவர் உயிரிழப்பு

by Bella Dalima 31-07-2022 | 8:59 PM

Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்து பெறுமதிவாய்ந்த இரண்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

நான்கு நாட்களாக கம்பளை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய - துன்கம மீன்பிடிக் கிராமத்தை சேர்ந்த 51 வயதான, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, கடந்த 4 நாட்களுக்கு முன்னர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து, அருகிலுள்ள அங்காடிக்கு செல்லும் போது விபத்தை எதிர்நோக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் இன்று உயிரிழந்தார்.

மீட்டியாகொட - மகவெல பகுதியில் வசித்துவந்த ஒரு பிள்ளையின் தந்தையான 41 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒருபுறம் பெறுமதியான உயிர்கள் காவுகொள்ளப்படும் நிலையில், மறுபுறம் சாதாரண பொதுமக்களும் விவசாயிகளும் மீனவர்களும் எரிபொருள் இன்றி தமது தொழிலை இடைநடுவே கைவிட வேண்டிய நிலையை எட்டியுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் எரிபொருளை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்வோரும் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்.

இவர்களைத் தேடி பொலிஸாரினால் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டவிரோதமாக எரிபொருளை சேகரித்தமை, களஞ்சியப்படுத்தியமை, விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்புகளில் 1108 லிட்டர் பெட்ரோல், 1441 லிட்டர் டீசல் மற்றும் 09 லிட்டர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.