அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்

அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

by Bella Dalima 26-07-2022 | 9:05 PM

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்குழு உறுப்பினர்களும் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடினர்.

இதன்போது, எதிர்கால அரசியல் நிலை குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள்
சக்தியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

கருத்து சுதந்திரம், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை மற்றும் பொதுமக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை ஆகியவற்றை ஒடுக்கும் நோக்குடன் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு எதிராக தமது வாக்குகளை பயன்படுத்த இதன்போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படாதிருக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற ஜனநாயக பொறிமுறைக்குள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஆராய்வதற்கு பாராளுமன்ற குழு முறை ஸ்தாபிக்கப்படுமாயின், அதற்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.