பர்மிங்காம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் கிளிநொச்சி குத்துச்சண்டை வீரர்

by Staff Writer 23-07-2022 | 8:55 PM
Colombo (News 1st) உலக விளையாட்டு ஜாம்பவான்கள் போட்டியிடும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்க வட மாகாணத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஒருவரும் இம்முறை தகுதி பெற்றுள்ளார். பர்மிங்காம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த நிக்கலஸ் பெற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டு அவர் குத்துச்சண்டை விளையாட்டில் பிரவேசித்துள்ளார். 6 மாதங்கள் கழித்து கனிஷ்ட தேசிய குத்துச்சண்டையில்   69 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர், வௌ்ளிப்பதக்கத்தை வென்று தனது ஆற்றலை நிரூபித்தார். இது தேசிய மட்டத்தில் வட மாகாணத்திற்கு குத்துச்சண்டையில் கிடைத்த முதலாவது பதக்கமாகும். 69, 75, 81 ஆகிய எடைப் பிரிவுகளில் திறமையை வௌிப்படுத்திய நிக்கலஸ் இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த குத்துச்சண்டை கோதாவில் தங்கப்பதக்கத்தை 2 வருடங்களுக்கு முன்பு சுவீகரித்தார். கிளிஃபர்ட் கிண்ண குத்துச்சண்டை கோதா அவரது திறமைக்கு களம் அமைத்தது.  இதன் மூலம் பர்மிங்காம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் போட்டியிடும் வாய்ப்பும் நிக்கலஸூக்கு கிட்டியது. இது அவரது முதல் சர்வதேச குத்துச்சண்டை கோதா என்பது குறிப்பிடத்தக்கது. பர்மிங்காம் பொதுநலவாய விளையாட்டு விழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த விளையாட்டு விழாவில் 72 நாடுகளை சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் 280 தங்கப்பதக்கங்களுக்காக 22 வகையான போட்டி நிகழ்ச்சிகளில் விளையாடவுள்ளனர்.