போராட்டக்களத்தில் கைதான 9 பேர் பிணையில் விடுவிப்பு 

by Bella Dalima 22-07-2022 | 7:56 PM
Colombo (News 1st) ஜனாதிபதி செயலகத்திற்கு  முன்பாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 பேர் இன்று பிற்பகல் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள்  இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். முறையற்ற ஒன்றுகூடலில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட   சட்டத்தரணி நுவன் போபகே உள்ளிட்ட 9 சந்தேகநபர்களே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவிருந்த மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் இன்று அதிகாலை நடவடிக்கை எடுத்தனர். இதன்போது,  சட்டத்தரணி நுவன் போபகே உள்ளிட்ட 9 ​சமூக செயற்பாட்டாளர்கள்  கைது செய்யப்பட்டனர். மக்கள் ஒன்றுகூடியிருந்த ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலிருந்த எதிர்ப்பு பதாகைகள் மற்றும்   கொடிகளை நேற்று பிற்பகல் அகற்றிய கோட்டாகோகம போராட்டக்காரர்கள் இன்று குறித்த பகுதியைக் கைவிட்டுச்செல்ல நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர். இவ்வாறான பின்னணியில், நேற்றிரவு 104 ஆவது நாளாகவும் போராட்டக்களத்தில் மக்கள் ஒன்றுகூடியிருந்தனர். இன்று அதிகாலை 1.30 அளவில் போராட்டக்களத்திற்குள் திடீரென பெருந்திரளான பொலிஸாரும் இராணுவத்தினரும் பிரவேசித்தனர். ஜனாதிபதி செயலக வளாகத்திலிருந்து உள்நுழைந்த பாதுகாப்பு தரப்பினர் காலி வீதியூடாக  கோட்டாகோகம போராட்டக்களத்தை சுற்றிவளைத்தனர். இதன்போது, அங்கிருந்தவர்களையும் கூடாரங்களையும் அகற்றுவற்கு நடவடிக்கை எடுத்தனர். செய்தி சேகரிக்க சென்றிருந்த ஊடகவியலாளர்கள் சிலரும் பாதுகாப்பு தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகினர். BBC ஊடகவியலாளர் ஒருவரும் அதில் அடங்குகின்றார். அவரது கைத்தொலைபேசியை பறித்து அதிலிருந்த வீடியோவை இராணுவ அதிகாரியொருவர் அழித்ததாக  BBC இன்று செய்தி வெளியிட்டுள்ளது. LGBT செயற்பாட்டாளர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தாக்குதலுக்குள்ளானவர்களில் சட்டத்தரணி ஒருவரும் உள்ளடங்குகிறார். காயமடைந்த சிலர் கோட்டாகோகமவிலிருந்து இன்று காலை வெளியேறினர். சம்பவத்தில் காயமடைந்த 14  பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் உயரதிகாரி  ஒருவர் தெரிவித்தார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்டத்தரணிகள் சிலர் இன்று பிற்பகல் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள அனைத்து வீதிகளிலும் தற்போது பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் ஊடகப்பிரிவால் சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அறிக்கையொன்று  வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பல தடவைகள் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சித்த போதிலும் அது தோல்வியில் முடிவடைந்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைதியான  முறையில் அங்கிருந்து செல்லுமாறு கோரிய போதிலும் அதனை மறுத்த போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக செயற்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நிலைமை தொடர்பில் ஆராய்ந்தபோது  வேறு மாற்றுவழி ஏதும் இருக்காததால், இவ்வாறு   ஆர்ப்பாட்டக்காரர்களை  ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் இருந்து அகற்றியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழமையான  சட்டத்தின் கீழ்  கைது செய்வதற்கும் தேடுதல் நடத்துவதற்கும் அதிகாரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு உள்ளதுடன், தற்போது நடைமுறையில் உள்ள  அவசரகால சட்டத்தின் கீழ் அந்த அதிகாரம் இராணுவத்தினருக்கும் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.