இலங்கையுடனான உறவு அதிகாரத்தில் உள்ளவரை பொறுத்ததல்ல

இந்திய-இலங்கை உறவு அதிகாரத்தில் உள்ளவரை பொறுத்து அமைவதல்ல: கோபால் பாக்லே

by Bella Dalima 22-07-2022 | 7:27 PM

India: இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவின் தூர்தர்ஷன் தேசிய தொலைகாட்சிக்கு விசேட செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.

இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வர்த்தக முதலீட்டு உறவுகள் சிறந்த  முறையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
துறைமுகம் , மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி, ஹைட்ரோ கார்பன் உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும் விவசாயம், பாலுற்பத்தி, தகவல்  தொழில்நுட்பம் மற்றும் உயர்  கல்வியிலும்  மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் கோபால் பாக்லே கூறியுள்ளார். 

பல தசாப்தங்களாக பாரிய நிறுவனங்கள் இலங்கையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி  செயற்பட்டு வருவதுடன்,  காலி முகத்திடலில் பாரிய இந்திய நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஜனநாயகக்  கட்டமைப்பு , அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக பொறிமுறைக்கு அமையவே முன்னெடுக்கப்படுவதாகக் கூறிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய-இலங்கை உறவு என்பது யார் அதிகாரத்தில் உள்ளார் என்பதைப் பொறுத்து அமைவதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஆயிரமாண்டு காலமாக இரு நாட்டு மக்களிடையில் தொடரும் பிணைப்பை அவ்வாறே தொடர்ந்து முன்கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.