விஸ்வலிங்கம் மணிவண்ணன் வழக்கிலிருந்து விடுவிப்பு 

சீருடை சர்ச்சை: யாழ். மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வழக்கிலிருந்து விடுவிப்பு 

by Staff Writer 20-07-2022 | 9:20 PM

Colombo (News 1st) யாழ்ப்பாண மாநகர சபை காவல் பணியாளர்களின்  சீருடை  மற்றும்  மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தொடர்பிலான வழக்கினை  தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம்  யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், யாழ். மாநகர சபையின் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாநகர சபையை தூய்மையாக பேணுவதற்காக ஐந்து  ஊழியர்கள்  கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இவர்கள் அணிந்திருந்த சீருடை, யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த சீருடையை ஒத்தது என  தெரிவித்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 9  ஆம் திகதி யாழ். மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னர்  அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு தொடர்பிலான சட்டமா அதிபருடைய ஆலோசனைக்காக வழக்குக் கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில்,  இந்த வழக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம்  யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்தது.

இதனையடுத்து, வழக்கின் சான்றுப்பொருட்களையும் விடுவிக்க  யாழ். மாவட்ட நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.