by Staff Writer 13-07-2022 | 7:26 PM
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று நாட்டை விட்டு சென்றபோது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்ததாக பதில் ஜனாதிபதியும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கிடைத்த சில புலனாய்வு தகவல்கள் வியப்பளிக்கும் வகையில் அமைந்திருந்தாக அவர் கூறினார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டாலும் போராட்டக்களத்தில் உள்ள சில தரப்பினர் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்ற திட்டமிட்டிருந்தாக அவர் கூறினார்.
ஜனாதிபதிக்கு விமான வசதியை வழங்கியமைக்காக விமானப் படைத் தளபதியின் வீட்டை முற்றுகையிட அவர்கள் திட்டமிட்டிருந்தாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இராணுவத் தளபதி, கடற்படை தளபதி ஆகியோரது வீடுகளையும் கைப்பற்றி இதன் ஊடாக ஆட்சியை கைப்பற்றும் திட்டம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில குழுக்களிடம் இருந்தாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தை சுற்றிவளைக்கும் போராட்டக்காரர்களின் திட்டம் இன்று கைகூடாமற்போனதாகவும் பிரதமர் கூறினார்.
பதில் ஜனாதிபதி என்ற வகையில் தாமும் சபாநாயகரும் இணைந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதை தடுக்க வேண்டிய தேவை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் பாசிசவாதத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காகவும் பாதுகாப்பு தரப்பினரின் வேண்டுகோளுக்கு அமைய அவசரகால நிலையையும், ஊரடங்கு சட்டத்தையும் அமுலுக்கு கொண்டுவந்ததாக பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இந்த சட்டங்களை பயன்படுத்தி நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறினார்.