கலந்துரையாடல்களில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது

ராஜபக்ஸக்களின் பாதுகாவலர்களுடன் கலந்துரையாட விரும்பவில்லை: சஜித் பிரேமதாச அறிக்கை

by Bella Dalima 09-07-2022 | 4:19 PM
Colombo (News 1st) சட்டத்திற்கு முரணாக பிரதமராக பதவி வகித்து வரும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடல்களில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் பதுங்கியிருந்த ராஜபக்ஸக்களை மீண்டும் அரசியல் களத்திற்கு வரவழைத்து பாதுகாப்பளித்து, போராட்டத்திற்கு துரோகம் இழைத்தவரே தற்போதைய பிரதமர் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். பிரதமரும் இந்த ​செயற்பாடுகளின் பிரதிவாதி என்பதை குறிப்பிட்டாக வேண்டுமென சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தன்னிச்சையான, அடக்குமுறையுடன் கூடிய ஜனநாயக விரோத அரசாங்கத்தின் தீர்மானம் தற்போது புலப்படும் வேளையில், குதிரை ஓடிய பின்னர் தொழுவத்தை மூடுவதைப் போன்ற வெற்றுக்கலந்துரையாடல்களில் தாம் பங்கேற்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெற்றியின் இலக்கு கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ள நிலையில், போலியான பிரதமரால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு மற்றுமொரு வீணான கலந்துரையாடல் மூலம் மீண்டும் ஒரு தடவை ராஜபக்ஸக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய நிலையற்ற தீர்வுகளிலிருந்து விடுபட்டு முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டுமெனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாவலர்களுடன், நாட்டின் எதிர்காலம் குறித்து கலந்துரையாட விரும்பவில்லை என எதிர்க்கட்சித் தலைவரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் முன்நின்ற சகல தரப்புகளுடனும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதில் தனது பங்களிப்பினை நல்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.