பிரச்சினைகளை தீர்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சில நாட்களில் பிரச்சினைகளை தீர்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 08-07-2022 | 10:31 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஊடக அறிக்கையொன்றை இன்று பிற்பகல் வௌியிட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலையை குறிப்பிட்ட சில நாட்களுக்குள் நிவர்த்திப்பதாக ஜனாதிபதி கூறியதாக குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. COVID வைரஸினால் அனைத்து நாடுகளும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, நிதிக்கையிருப்பு இல்லாத இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தில் இந்த நிலை அதிக தாக்கம் செலுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாகவும் அடுத்த சில வாரங்களில் அந்தக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியை மேற்கோள்காட்டி அவரது ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச தலைவர்கள், வௌிநாட்டுத் தூதுவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் குறித்த நாடுகள் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரதிபலனாக தேவையான உரம் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விவசாயத் திட்டங்கள் மூலம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 21 ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளமை ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான தீர்வுகளைக் கண்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியின் அரசியல் குழுக்கள் மக்களை திசைதிருப்பி முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் மிகவும் கவலையடைவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாடு பின்நோக்கி செல்லும் நிலை ஏற்படும் எனவும் அறிக்கை மூலம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.