எரிபொருள் இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி 

விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது

by Bella Dalima 29-06-2022 | 3:52 PM
Colombo (News 1st) விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் எரிபொருள் களஞ்சியசாலை பொறுப்பாளர்களுக்கும் சிவில் விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. விமானங்களுக்கான எரிபொருளை கொண்டு வரும் செயற்பாட்டை இதுவரை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனமே முன்னெடுத்திருந்தது. டொலர் நெருக்கடியின் காரணமாக விமானங்களுக்கான எரிபொருளைக் கொண்டு வருவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. அதற்கமைய, தற்போதுள்ள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, விமானங்களுக்கான எரிபொருளைக் கொண்டு வரும் செயற்பாட்டை தனியாருக்கு வழங்குவதாயின், அதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாக எரிபொருள் களஞ்சியசாலை பொறுப்பாளர்கள் உறுதியளித்துள்ளனர். இதற்கு முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத்தருவதாக விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.