விசுவமடு விவகாரம் தொடர்பில் இராணுவம் அறிக்கை

விசுவமடுவில் அமைதியின்மை;  இராணுவத்தினர் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு

by Bella Dalima 19-06-2022 | 11:24 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - விசுவமடு பகுதியிலுள்ள இராணுவ காவலரணுக்கு அருகே நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையின்போது இராணுவத்தினர் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மது போதையில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காகவே வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது. விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள, இராணுவ காவலரணுக்கு அருகே ​நேற்றிரவு 8 மணியளவில் அமைதியின்மை ஏற்பட்டது. இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை விடுவிக்குமாறு கோரி குறித்த நபரின் உறவினர்களும் பொதுமக்களும் காலவரணுக்கு அருகே கூடியிருந்தபோது அமைதியின்மை ஏற்பட்டதாக மக்கள் கூறினர் இதன்போது, இராணுவத்தினர் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் 7 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் மூவர் இராணுவ உறுப்பினர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இன்று அமைதி நிலவியது. இதேவேளை, மதுபோதையில் களேபரத்தை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. மதுபோதையில் இருந்த சிலர் விசுவமடு காலவரணில் இருந்த இராணுவத்தினரை ஆத்திரமூட்டும் வகையில் கண்ணாடிப் போத்தல்கள் மற்றும் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்த படையினர் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, அவர்களது முயற்சியை தடுத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இராணுவ உறுப்பினர்கள் மூவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான சுமுக உறவு மற்றும் ஒத்துழைப்பை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டவாறு சிலர் இந்த முயற்சியை மேற்கொண்டமை ஆரம்ப விசாரணையில் உறுதியானதாகவும் இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.