by Staff Writer 09-06-2022 | 7:03 AM
Colombo (News 1st) மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களால் நேற்று(08) நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.
தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடலை நடத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிராக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்று(08) நள்ளிரவு பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், நாட்டின் பல பகுதிகளில் தற்சமயம் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, மின்சார விநியோகம் உள்ளிட்ட மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நேற்று(08) அதிவிசேட வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டுள்ளது.