முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தினருடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்

by Bella Dalima 03-06-2022 | 7:05 PM
Colombo (News 1st) எதிர்காலத்தில் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதில் பிரச்சினைகள் ஏற்படாதவாறான நடைமுறையொன்றை திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் நேற்று (02) நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்தார். முச்சக்கரவண்டிகளுக்கான ஒழுங்குமுறை நிறுவகமொன்றை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் பிரதமர் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார். மாதமொன்றுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள 500 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எரிபொருள் விநியோக சங்கத்தின் உறுப்பினர்களுடனும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்தை சீராக்குவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.