பிரதிவாதிக்கு ஆவணங்கள் தமிழில் சமர்ப்பிப்பு

பாத்திமா ஹாதியாவிற்கு எதிரான வழக்கு: பிரதிவாதிக்கு ஆவணங்கள் தமிழில் சமர்ப்பிப்பு

by Staff Writer 27-05-2022 | 5:04 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிற்கு எதிரான வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் தமிழ் மொழி மூலம் இன்று பிரதிவாதிக்கு சமர்ப்பிக்கப்பட்டன. கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஷி முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அப்துல் காதர் பாத்திமா ஹாதியா பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிரதிவாதிக்கு எதிரான குற்றப்பத்திரத்தின் இணைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இதன்போது அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரனால், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியிடம் கையளிக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு மேலதிகமாக பிரதிவாதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை கருத்திற்கொண்டு, வழக்கை தொடர்ச்சியாக நடத்த உத்தரவிடுமாறு இதன்போது அரசதரப்பு சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார். அத்துடன், இந்த குற்றவியல் வழக்கிற்காக முன்விளக்க மாநாட்டை நடத்த உத்தரவிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், முன்விளக்க மாநாடு நடத்த அவசியம் இல்லை என தெரிவித்த பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி, அரச தரப்பு சட்டத்தரணியின் கோரிக்கைக்கு ஆட்சேபனையை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஷி நீதியின் நலனை எட்டுவதற்கும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்கினை துரித கதியிலும் வினைத்திறனாகவும் நிறைவு செய்வதற்கும் முன்விளக்க மாநாடு அவசியம் என அறிவித்து, அதனை நடத்துவதற்கு உத்தரவிட்டார். அதற்கமைய, வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுலை மாதம் 21 திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் வரை பிரதிவாதியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.