by Staff Writer 30-04-2022 | 8:20 PM
Colombo (News 1st) புதிய இடைக்கால அமைச்சரவையை ஸ்தாபிப்பதற்கும் தேசிய சபை ஒன்றை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இணக்கம் தெரிவித்ததாக நேற்று (29) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது.
இது தொடர்பாக தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து நியூஸ்ஃபெஸ்ட் இன்று ஆராய்ந்தது.
தற்போதுள்ள அரசாங்கம் மாற்றியமைக்கப்பட வேண்டுமாக இருந்தால், அரசாங்கத்தின் தலைவராக உள்ள ஜனாதிபதி முதலில் பதவி விலக வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவி விலகாமல் அமைச்சரவை மாத்திரம் விலகுவதன் மூலம் எவ்வித பயனும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வளவு காலமும் அரசாங்கத்தில் இருந்தவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை எடுப்பதாக இருந்தால், அது வெறுமனே மக்களை ஏமாற்றுகின்ற செயலாகவே அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் இதுவரை எவ்வித அழைப்பும் தமக்கு வரவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் பிரதமர் தொடர்பில் எவவித விடயங்களும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
தமது கட்சியில் உள்ள நசீர் அஹமட்டிற்கு அமைச்சர் பதவி வழங்கியதன் மூலம் ஜனாதிபதியின் நல்ல எண்ணங்கள் தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவுவதாகவும் நிசாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம் செய்த அநியாயங்களை மூடிமறைப்பதற்கான முயற்சியாகவே இடைக்கால அமைச்சரவை தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியது.
அரசாங்கத்திற்கு மறைமுகமாக ஆதரவு வழங்கி வருகின்ற தரப்பினர் அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கும் இந்த செயற்பாட்டுடன் தமது கட்சி இணையாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகக் காணப்படுவதினால், அரசாங்கத்தை நம்பி எதனையும் செய்ய முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதி தலைவர் சட்டத்தரணி N.M.ஷஹீட் தெரிவித்தார்.
தமது கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு ஏற்கனவே அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் போதே அந்தக் கட்சியின் இருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், அரசாங்கத்தை நம்பி பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் குறிப்பிட்டார்.