by Bella Dalima 20-04-2022 | 6:50 PM
Colombo (News 1st) ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நால்வர் அடங்கிய விசேட குழுவொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்துள்ளது.
இந்த குழுவில் சுலரி லியனகம, மேனகா ஹேரத், லால் வீரசிங்க மற்றும் A.S. நிலந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ரம்புக்கனையில் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பரிந்துரைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
இந்நிலையில், ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கையுடன் தொடர்புடைய சர்வதேச இராஜதந்திரிகள் பலரும் விசனம் வௌியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏதேனுமொரு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் வன்முறை, சாத்வீகமாக முன்னெடுக்கும் போராட்டக்காரர்களின் உரிமையை மீறுவதாக அமையும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரம்புக்கனை சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் Trine Jøranli Eskedal தெரிவித்துள்ளார்.
இந்த உயிரிழப்பினால் குடும்பங்களே பாதிக்கப்படுவதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Edward Appleton கருத்து வௌியிட்டுள்ளார்.