by Bella Dalima 12-04-2022 | 7:42 PM
வௌிநாட்டு கடன் தவணை மற்றும் வட்டியை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (12) அறிவித்துள்ளார்.
https://www.newsfirst.lk/tamil/2022/04/12/%e0%ae%b5%e0%af%8c%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3-%e0%ae%9a%e0%af%86/
கடனை செலுத்த முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டது எவ்வாறு?
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்தபோது நாட்டில் 7.9 பில்லியன் அமெரிக்க டொலர் வௌிநாட்டு கையிருப்பு இருந்தது. தற்போது அது 1.9 பில்லியனாக குறைவடைந்துள்ளது. அதிலும் அதிகமானவை சீனா வழங்கிய நாணய பரிமாற்று வசதியாகும்.
நாட்டில் மிகவும் குறைந்த தொகையே டொலராக காணப்படுகின்றது. அதன் காரணமாகவே எதிர்வரும் காலத்தில் இலங்கை செலுத்த வேண்டிய கடன்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் முதலில் நிபுணர்களின் முன்னெச்சரிக்கையும் கருத்திற்கொள்ளாது, பெருந்தொகை வரிச்சலுகையை வழங்கினர். அதன் காரணமாக 600 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் இழந்தது.
அதன் பின்னர் COVID தொற்று ஏற்பட்டபோது பங்களாதேஷ் கூட உரிய நேரத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை சரியாக செய்யவில்லை.
எவரும் அறியாத காரணங்களுக்காக அதனை காலம் தாழ்த்திவிட்டு, குறைந்த விலைக்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை இழந்தனர்.
2021 ஆம் ஆண்டு இலங்கை செலுத்த வேண்டியிருந்த வெளிநாட்டுக் கடன்களை கையிருப்பிலிருந்து செலுத்திவிட்டு அன்றாட செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று கடன் வாங்க ஆரம்பித்தனர்.
சீனா, இந்தியா இறுதியில் பங்காதேஷூக்கு சென்று டொலர்களை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவற்றை மூன்று மாதங்களில் மீள செலுத்த வேண்டும்.
உலக கடன் தரப்படுத்தலை மேற்கொள்ளும் அனைத்து நிறுவனங்களும் இலங்கையை கடன் விவகாரத்தில் அபாயம் மிக்க நாடாக பட்டியலிட்டது.
பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தரப்படுத்தலை மேற்கொள்ளும் நிறுவனங்களை தூற்றிக்கொண்டிருந்தார்களே தவிர செய்யவேண்டிய எதனையும் செய்யவில்லை.
இந்த பின்புலத்தில் பாராளுமன்றத்தில் இருந்த நிவாட் கப்ராலை மத்திய வங்கி ஆளுநராக நியமித்தனர்.
பொருளாதார நிபுணர்கள் வேண்டாம் என்று கூறிய போதும், ஜனவரி மாதம் 18 ஆம் திகதி 500 மில்லியன் டொலர் இறையாண்மை முறிகளை செலுத்தினர்.
இதனை பிற்போட்டால் தரப்படுத்தலில் முன்னோக்கி பயணித்து சர்வதேச சந்தையில் கடன்பெறக்கூடிய நிலைமை ஏற்படும் என நிபுணர்கள் குறிப்பிட்டனர். அதனை செவிமடுக்காமல், 500 மில்லியனை செலுத்தினர்.
இறையாண்மை முறிகள் சர்வதேச சந்தையில் இருந்து பெறப்படும் நிலையில், முறிகளின் பெறுமதி மிகவும் குறைவடைந்து காணப்பட்டது.
சந்தையில் இதனை குறைந்த விலையில் பெற்றுக்கொண்டு 500 மில்லியனை செலுத்தும்போது யாராவது பெரும் இலாபத்தை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் இருந்தது. இவை இன்னும் வெளிப்படுத்தப்படாத விடயங்கள்.
500 மில்லியனை செலுத்தியமையினால், சர்வதேசத்தில் இலங்கை தொடர்பிலான நம்பிக்கை மேலும் இல்லாமற்போனது. அதற்கு காரணம் நாட்டின் கையிருப்பு அதிகளவில் குறைவடைந்தமையாகும்.
இதன் பிரதிபலனாக 3 அல்லது 6 மாதங்களில் மீள செலுத்தும் அடிப்படையில் கடனுக்கு பெற்றுக்கொண்ட எரிபொருள், சமையல் எரிவாயு நிலக்கரி என்பவற்றை ஏற்றிய கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்த பின்னர் பணத்தை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
35 மில்லியன் டொலருக்கு பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்த எரிபொருளை ஏற்றிய கப்பலுக்கு 51 மில்லியன் டொலரை செலுத்தவேண்டி ஏற்பட்டதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறியிருந்தார்.
டொலரின் கேள்விக்கு ஏற்ப நிர்ணய விலையை மேற்கொள்வதற்கு இடமளிக்காமை மற்றைய தவறாகும்.
அதிகாரத்திற்கு வந்த நாளிலிருந்து கடந்த மார்ச் முதல் வாரம் வரைக்கும் எஞ்சியிருந்த வெளிநாட்டு கையிருப்பையும் சந்தைக்கு விநியோகித்தே 202 ரூபாவிற்கு டொலரை தக்க வைத்துக்கொண்டனர்.
2019 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 5 பில்லியன் டொலரை இதனால் இழந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த செயற்பாடுகள் காரணமாக ஏற்றுமதி வருமானமும் குறைவடைந்து, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் உழைக்கும் பணத்தை நம்பிக்கையுடன் இலங்கை வங்கிகளுக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக பிரச்சினை மேலும் உக்கிரமடைந்தது.
எனினும், எமக்கு பிரச்சினை இல்லை என்றும் பணம் இருப்பதாகவும் அதிவேக வீதியை திறந்து வைத்தபொழுது சில அமைச்சர்கள் உற்சாகமாகக் கூறினர்.
முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்காததால், கடன்களை செலுத்த முடியாத நிலைக்கு இன்று நாடு தள்ளப்பட்டுள்ளது.
இதுவே உண்மை. இவை உண்மைக்கு பின்னால் உள்ள தரவுகள்.
தரவுகள் எப்போதும் உண்மை நிலையினையே வௌிப்படுத்தும்.
The Facts Don't Lie ...
.