by Staff Writer 07-04-2022 | 5:25 PM
Colombo (News 1st) அரசுக்கு ஆதரவு வழங்குவதில் இருந்து தான் விலகிக்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌஃபீக் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம், நிதிச் சட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு என்பவற்றின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தாலும் இனிவரும் காலத்தில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் எந்த பிரேரணைக்கும் ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌஃபீக் தெரிவித்தார்.
தான் தற்போது கட்சியின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டுள்ளதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்ற காரணங்களால் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளமையினால், தற்போது மக்களின் பக்கம் இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் கூறினார்.
ஒரு வாரத்திற்கு போதுமான மருந்து கூட கையிருப்பில் இல்லையென்று கூறப்படும் நிலையில், தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முடியாது என அவர் தெரிவித்தார்.