மேலும் 1 பில்லியன் டொலர் கடன் கோரும் இலங்கை

இந்தியாவிடம் மேலும் 1 பில்லியன் டொலர் கடன் கோரும் இலங்கை

by Staff Writer 28-03-2022 | 5:30 PM
Colombo (News 1st) அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளதாக 'ரொய்ட்டர்ஸ்' (Reuters) செய்தி வௌியிட்டுள்ளது. அரிசி, கோதுமை மா, தானிய வகைகள், சீனி மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இலங்கையின் புதிய கடன் கோரிக்கையை நிறைவேற்றுவதாக இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவினால் ஏற்கனவே ஒரு பில்லியன் டொலர் கடனுதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் புதுடில்லிக்கு சென்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஒரு பில்லியன் டொலர் கடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தார். இதனைத் தவிர, இந்தியா இவ்வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவிற்காக 500 மில்லியன் டொலர் கடன் வசதி மற்றும் நாணயப்பரிமாற்ற வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர் கடனை வழங்கியிருந்தது.