கடதாசிக்கு தட்டுப்பாடு: அச்சக உரிமையாளர்கள் பாதிப்பு

by Bella Dalima 22-03-2022 | 8:20 PM
Colombo (News 1st) நாட்டில் தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியினால் பல்வேறு துறைகளும் இன்று முடங்கி வருகின்றன. கடதாசி, மூலப்பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு, பொருட்களின் விலையேற்றத்தினால் அச்சக உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் குறித்த துறைசார்ந்து தமது ஜீவனோபாயத்தை முன்னெடுக்கின்ற பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது தொழிலினை கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர். கடதாசி தட்டுப்பாடு, மூலப்பொருட்களின் விலையேற்றத்தினால் கொழும்பிலுள்ள பல அச்சகங்கள் முடங்கி வருகின்றன. மூலப்பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால், தமது உற்பத்திகளின் விலையினை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சகத்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், கற்றல் உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களில் A4 தாள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றதுடன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது. 750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட A4 பேப்பர் பொதியொன்று 2000 ரூபாவிற்கு விற்கப்படுவதாக வர்த்தகர் ஒருவர் குறிப்பிட்டார். யாழ். நகரிலும் நகல் பிரதி எடுக்கும் (PHOTO COPY) கடை உரிமையாளர்கள் கடதாசி தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.