by Bella Dalima 22-03-2022 | 4:38 PM
Colombo (News 1st) இந்தியாவால் வழங்கப்படவுள்ள 06 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில், சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்க ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஒருங்கிணைப்பு நிலையத்திற்கான உபகரணங்களை விநியோகிக்கும் இந்தியாவின் பாரத் இலத்திரனியல் நிறுனத்துடனும் மற்றுமொரு ஒப்பந்தத்தை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர், அவற்றை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இதனிடையே, இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அம்பலப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, இந்தியாவின் நிதியுதவின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையம், கடற்படை தலைமையகத்திற்குள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
ஒருங்கிணைப்பு நிலையத்தின் உப அலுவலகம் ஹம்பாந்தோட்டையிலும் ஏனைய 7 உப நிலையங்களை நாட்டின் 7 பகுதிகளில் ஸ்தாபிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இந்த ஒருங்கிணைக்கு மத்திய நிலையத்திற்கு இந்தியாவால் தயாரிக்கப்படும் ஆளில்லா சமுத்திர கண்காணிப்பு படகுகள் மூன்று வழங்கப்படவுள்ளதுடன், இலங்கை கடற்படைக்கு 4000 ட்ரோன் கமராக்களும், மிதக்கும் தடாகமும் இந்தியாவினால் வழங்கப்படவுள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.
டிஜிட்டல் அடையாள வரைபை தயாரிப்பதற்கு 300 மில்லியன் இந்திய ரூபாவை வழங்கவும் இந்திய அரசாங்கம் தயாராகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இந்த ஒப்பந்தங்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து விடயங்களை தௌிவுபடுத்துவதற்கு நிதி அமைச்சர் பாராளுமன்ற சபைக்குள் பிரசன்னமாகவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இன்றைய சபை அமர்வின் போது தெரிவித்தார்.