கைக்குண்டு மீட்பு; ஓய்வு பெற்ற வைத்தியருக்கு பிணை

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு; ஓய்வு பெற்ற வைத்தியருக்கு பிணை

by Staff Writer 21-03-2022 | 5:59 PM
Colombo (News 1st) பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற வைத்தியருக்கு பிணை வழங்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டது. ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்வதற்கு சந்தேநகபருக்கு மேல்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார். சந்தேகநபரான ஓய்வு பெற்ற வைத்தியர் ஷர்லி ஹேரதிற்கு வௌிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, சந்தேகநபரின் கடவுச்சீட்டை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கையளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் சந்தேகநபருக்கான பிணை மனு நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை பரிசீலித்த நீதிபதி, சந்தேகநபருக்கு பிணை வழங்கியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபரான ஓய்வுபெற்ற வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக மனுவினூடாக குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, சந்தேகநபரின் உடல்நிலையை கருத்திற்கொண்டு பிணை வழங்குவதற்கு உத்தரவிடுவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.