by Staff Writer 17-03-2022 | 8:43 PM
Colombo (News 1st) எண்ணெய், உணவு, மருந்து கொள்வனவிற்காக இந்தியாவுடன் கடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் உள்நாட்டு கைத்தொழில்களில் பாரிய தாக்கத்தை செலுத்தும் சீன சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு கூட்டத்தில் இந்த உடன்படிக்கையை துரிதப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் நேற்று அறிவித்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் நிலைமை தொடர்பாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா கடந்த வருடத்தில் 4700 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
இலங்கையிலிருந்து சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொருட்களின் பெறுமதி 274 மில்லியன் டொலர்களாகும்.
இந்த தரவுகளுக்கு அமைய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் அபாயம் தௌிவாகின்றது அல்லவா?
ஏற்கனவே அதிகளவிலான பொருட்களை சீனாவிடமிருந்து கொண்டுவரும் இலங்கை, சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதன் ஊடாக சீனாவின் சந்தையுடன் போட்டியிட முடியுமா?
இன்னமும் முறையான சட்டமூலம் தயாரிக்கப்படாத நிலையில், அவசர அவசரமாக இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால் உள்நாட்டு கைத்தொழில்களின் நிலை என்னவாகும்?
இந்தியாவிடம் உடன்படிக்கைகள் மூலம் எரிசக்தி துறை ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனுக்காக சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதா?