by Staff Writer 14-03-2022 | 8:05 PM
Colombo (News 1st) ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை(15) மாலை இடம்பெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நாளை(15) காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வீட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா நியூஸ்பெஸ்டுக்கு கூறினார்.
ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான அழைப்பு தொடர்பில் கடந்த வாரம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தவேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் இந்த நேரத்திலே அரசாங்கம் அழைத்துள்ளமை தம்மை ஒரு பகடைக்காயாக பாவித்து சர்வதேச மற்றும் உள்ளக அரசியல் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கையாக அமைந்துவிடும் என செல்வம் அடைக்கலநாதன் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதியுடனான நாளைய சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் வினவியபோது, நாளை(15) காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் இல்லத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தாமும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளைய தினம்(15) தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஏற்கனவே இரு சந்தர்ப்பங்களில் இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கூட்டமைப்பு உள்ளிட்ட 07 கட்சிகள் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் நாளைய சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயங்களில் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.