by Staff Writer 09-03-2022 | 8:42 PM
Colombo (News 1st) மிகவும் நெகிழ்வுப்போக்குடன் நாணய மாற்று வீதத்தை தீர்மானிப்பதற்கு சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்ததை அடுத்து, நாணய மாற்று வீதம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் சில தீர்மானங்கள் சிக்கலை தோற்றுவித்துள்ளன.
வௌிநாடுகளில் உள்ள பணியாளர்கள் அனுப்பிவைக்கும் நிதி தொடர்பிலேயே இந்த பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
நெகிழ்வுப்போக்குடன் நாணய மாற்று வீதத்தை தீர்மானிப்பதற்கு இடமளிப்பதாக அறிவித்த மத்திய வங்கி, அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 230 ரூபாவை கடக்காது என குறிப்பிட்டது.
இன்று வணிக வங்கிகள் ஒரு டொலரை 230 ரூபாவிற்கு விற்பனை செய்தன.
இதேவேளை, வௌிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பி வைக்கும் ஒவ்வொரு டொலருக்கும் 38 ரூபா வீதம் ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் இவ்வாறு அனுப்பி வைக்கப்படுகின்ற டொலருக்கு 10 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும், அமைச்சரவை இந்த தீர்மானத்தை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் நாணய மாற்று வீதம் தொடர்பில் மத்திய வங்கி எடுத்திருந்த தீர்மானம் தொடர்பில் அமைச்சரவை அறிந்திருக்கவில்லை என்பதும் நேற்றைய ஊடக சந்திப்பின்போது தெரியவந்தது.
மத்திய வங்கியின் ஆளுநர் அனைத்து அனுமதிப்பத்திரம் பெற்ற வணிக வங்கிகளினதும் பிரதம நிறைவேற்றதிகாரிகளுக்கு நாணய மாற்று வீதம் தொடர்பில் அறிவிக்கும் வகையில் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், வௌிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்கும் டொலருக்கு 10 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் உத்தரவு இரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக எடுக்கப்படவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பதை அரசாங்கம் எதிர்காலத்தில் அறிவிக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தற்போது வௌிநாட்டு பணியாளர்கள் அனுப்பி வைக்கும் டொலர்களுக்காக செலுத்தப்படவுள்ள ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் தௌிவற்ற நிலை காணப்படுகிறது.
அமைச்சரவை பேச்சாளர் நேற்று கூறியதைப் போன்று மத்திய வங்கியின் ஆளுநர் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தவும் இல்லை.
இது இவ்வாறிருக்க வௌிநாட்டு பணியாளர்கள் அனுப்பி வைக்கும் டொலருக்கு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 20 ரூபா விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு இன்று பிற்பகல் அறிவித்தது.
வௌிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பி வைக்கும் அந்நிய செலாவணி ரூபாவாக மாற்றப்பட்டதன் பின்னர் டொலர் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு 20 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வௌிநாட்டு பணியாளர்கள் அனுப்பி வைக்கும் பணத்திற்கான பாதுகாப்புடன் மேலதிக வருமானமும் கிடைக்கவுள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.