by Staff Writer 09-03-2022 | 7:35 PM
Colombo (News 1st) எரிவாயு ஏற்றிய கப்பல்கள் கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள நிலையில், மக்கள் இன்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கினர்.
லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே 2500 மெட்ரிக் தொன் எரிவாயுவை பெற்றுக்கொண்டாலும், அது மூன்று நாட்களுக்கான கேள்வியை ஈடு செய்வதற்கே போதுமானதாகவிருந்தது.
இலங்கைக்கு எரிவாயு விநியோகிப்பதற்கான நீண்டகால விலை மனுவை பெற்றுள்ள நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட மூன்று கப்பல்கள் பல நாட்களாக கெரவலப்பிட்டிய, ஹெந்தல கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளன.
இந்த கப்பல்களில் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை இறக்குவதற்கு விநியோகஸ்தருக்கு கிடைக்க வேண்டிய 16 மில்லியன் அமெரிக்க டொலர் கோரப்பட்டுள்ளதாக அண்மையில் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த பணத்தில் 5 மில்லியன் டொலரை நிதி அமைச்சு செலுத்துவதற்கு இணங்கியதை அடுத்து, ஒரு கப்பலில் இருந்த 2,500 மெட்ரிக் தொன் எரிவாயு இறக்கப்பட்டது.
எரிவாயு விநியோக விலைமனு அண்மைக்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு வித்திட்டதுடன், லிட்ரோ நிறுவனத்தின் தற்போதைய தலைவர் நேரடியாகவே அது தொடர்பாக குற்றம் சுமத்தினார்.
அவர் மிகவும் இலாபமானது என கூறி எரிவாயு விலைமனுறை வேறொரு நிறுவனத்திற்கு வழங்கவும் முயற்சித்தார்.
இறுதியில் நீண்டகால விலைமனுவை பெற்ற விநியோகத்தரும் தலைவரின் விருப்பத்தின் பேரில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிறுவனமும் நாட்டிற்கு எரிபொருள் விநியோகிப்பதை தவிர்த்துக்கொண்டன.
விலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், எரிவாயு நிறுவனங்கள் உலக சந்தையின் விலைகளுக்கு அமைய எரிவாயு விலையை அதிகரிப்பதற்கும் தற்போது எவ்வித தடையும் கிடையாது.
அவ்வாறெனில், இந்தப் பிரச்சினைக்கான காரணம் முகாமைத்துவ குறைப்பாடு அல்லவா?
இந்த பிரச்சினையால் மக்களே மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.