by Staff Writer 04-03-2022 | 7:00 PM
Colombo (News 1st) மாலைத்தீவில் மரணமடைந்த இலங்கை கால்பந்தாட்ட வீரரான யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் யாழ்ப்பாணத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது.
இதன்போது பலரும் கலந்துகொண்டு மறைந்த கால்பந்தாட்ட வீரருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து அன்னாரின் பிறந்த இடமான மன்னாருக்கு பூதவுடல் கொண்டுசெல்லப்பட்டது.
மன்னாரில் நாளைய தினம் அஞ்சலிக்காக வைக்கப்படும் அன்னாரின் பூதவுடல், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மரியாதை செலுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட அணியில் 2020 ஆம் ஆண்டு இடம்பிடித்த யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் திறமைவாய்ந்த பின்கள வீரராவார்.
மன்னார் - பனங்கட்டி கொட்டு கிராமத்தில் பிறந்த அவர் ஆரம்ப காலத்தில் வென்னப்புவ நியூ யங்ஸ் கால்பந்தாட்ட கழகத்திற்காக விளையாடியுள்ளார்.
சர்வதேச மட்டத்தில் ஆற்றல்களை வௌிப்படுத்தியதன் மூலம் பியூஸ்லஸிற்கு மாலைத்தீவுகளின் வெலன்ஸியா கழகத்திற்காக விளையாடும் வாய்ப்பு கிட்டியது.
மாலைத்தீவுகளின் திவேஹி ப்ரீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் வெலன்ஸியா கழகத்திற்காக விளையாடிய அவர் கடந்த சனிக்கிழமை தாம் தங்கியிருந்த ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.