by Staff Writer 02-03-2022 | 9:06 PM
Colombo (News 1st) இன்று நாடு முழுவதும் டீசல் கொள்வனவிற்கான வரிசையை காண முடிந்தது.
அதிகளவிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இருக்கவில்லை என்பதுடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தளவில் எரிபொருள் இருந்தாலும் அதனை பெற்றுக்கொள்ள பல மணித்தியாலங்கள் மக்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.
இந்நிலையில், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில், பொறுமையை இழந்த மக்கள் தமது எதிர்ப்பினை வௌியிட்டனர்.
ஹம்பாந்தோட்டை, ரன்ன வாடிகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்ள பல நாட்கள் முயற்சி செய்த மக்கள் அது கிடைக்காமையினால் இறுதியில் இன்று காலை மாத்தறை - வெல்லவாய வீதியை மறித்தனர்.
ஹூங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றனர். எனினும், இன்றைய தினமும் மக்களுக்கு டீசலை பெற்றுக்கொள்ள முடியவில்லையென நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாவத்தகம - பீலிகட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்வதற்காக பல நாட்கள் முயற்சி செய்த மக்கள் இன்று குருநாகல் - கண்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணித்தியாலத்தின் பின்னர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் கிடைத்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, போக்குவரத்து, விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, கைத்தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளும் டீசல் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன.
களனியில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நேற்று (01) இரவில் இருந்து காத்திருந்தனர். வௌி மாவட்டங்களிலும் இதே நிலைமையை காணமுடிந்தது.