by Staff Writer 01-03-2022 | 5:36 PM
Colombo (News 1st) தங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கழிவறைக்குள் சென்ற விமானப் பயணி ஒருவர், நீண்ட நேரமாக வௌியில் வராததையடுத்து, ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த பயணியிடமிருந்து 430 கிராம் நிறையுடைய 03 தங்கக்கட்டிகள் (1 கிலோ 290 கிராம்) கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதான இந்திய பிரஜை ஒருவரே தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் சென்னை நோக்கி செல்லும் விமானத்தில் பயணிக்கவிருந்த ஒருவரென பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபருக்கு துபாயிலிருந்து நேற்று அதிகாலை வருகைதந்த 43 வயதான மற்றுமொரு இந்திய பிரஜையால் குறித்த தங்கக்கட்டிகள் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவரும் சுங்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.