by Bella Dalima 19-02-2022 | 6:12 PM
Colombo (News 1st) உக்ரைன் அருகே உள்ள எல்லை பகுதியில் இராணுவத்தை திரும்ப பெற்று வருவதாக ரஷ்யா கூறி வந்தாலும், அங்கு ரஷ்ய படை எந்தளவிற்கு ஆயத்தமாக உள்ளது என்பதை மாக்சர் செயற்கைக்கோள் நிறுவனம் உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள் மூலம் வெளிக்கொண்டுவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக, ஐந்து இடங்களில் எடுக்கப்பட்ட உயர் தர புகைப்படங்களை அது வெளியிட்டுள்ளது.
உக்ரைன் அருகே அந்நாட்டை தாக்குவதற்கான இராணுவ ஆயுதங்களும் ஜெட் விமானங்களும் குவிக்கப்பட்டிருப்பதை அந்த புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
எந்நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவிவரும் நிலையில், பெலாரஸ், கிரிமியா, மேற்கு ரஷ்யா போன்ற முக்கிய பகுதிகளில் ரஷ்ய படைகளின் நடமாட்டம் எந்தளவிற்கு உள்ளது என்பதையும் இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெளிவுபடுத்தியுள்ளது.
ரஷ்யாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என ரஷ்யா கூறியுள்ளது. இருப்பினும், உக்ரைன் ஒருபோதும் நேட்டோவில் சேராது என்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மேற்கத்திய நாடுகளின் கூட்டணி படைகளை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ஆனால், இந்த கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் ஏற்கவில்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியில் ரஷ்யா படையெடுத்து ஆக்கிரமித்துக்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.