by Staff Writer 16-02-2022 | 4:56 PM
Colombo (News 1st) பாரியளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் அல்லது பாவனையாளர்கள், அவர்களிடமுள்ள மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு இடமளித்துவிட்டு, தேசிய மின் கட்டமைப்பின் மூலம் வழங்கப்படும் மின் விநியோகத்தை இடைநிறுத்துமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் போது ஒரு அலகுக்கு 36 ரூபாவை வழங்க தயார் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
மூன்று மாத மின்வெட்டுக்கான அனுமதியை மின்சார சபை கோரியிருந்ததுடன், அந்த அனுமதியை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (15) நிராகரித்தது. அத்துடன், பல மாற்றுப் பரிந்துரைகளையும் முன்வைத்தது.
நிர் மின் உற்பத்தியை 50 வீதத்தால் குறைத்தல், பாரியளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் தமது மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதித்தல், மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் வீடுகளில் குளிரூட்டிகளை பயன்படுத்துவதாக இருந்தால், கட்டாயமாக மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துதல், அரச நிறுவனங்களில் மின் பாவனையை குறைத்தல், உள்ளூராட்சி மன்றங்களின் மின் பாவனையை 80 வீதத்தால் குறைத்தல் என்பன அதில் அடங்குகின்றன.
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் சிபாரிசுகள் தமக்கு கிடைக்கவில்லையென இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரொஹான் டி அபேசேகர தெரிவித்தார்.
நீர் மின் உற்பத்தியை வரையறுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், நீர் முகாமைத்துவ குழுவின் சிபாரிசின் படியே அதனை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளில் குளிரூட்டிகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துமாறு நிறுவனங்களுக்கு கூற முடிந்தாலும், அது நடைமுறை சாத்தியமற்றது எனவும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.