'இந்தியாவின் இசைக்குயில்'  மௌனித்தது

இந்தியாவின் 'மெலடி குயின்' லதா மங்கேஷ்கர் மறைந்தார்

by Chandrasekaram Chandravadani 06-02-2022 | 3:13 PM
Colombo (News 1st) இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92 ஆவது வயதில் இன்று (06) காலமானார். கொவிட் தொற்றுக்குள்ளான அவர் கடந்த மாதம் 08 ஆம் திகதி மும்பையிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். 28 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர், உறுப்புக்கள் பல செயலிழந்தமையால் இன்று (06)  உயிரிழந்தார். அன்னாரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அன்னாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றும் (06) நாளையும் (07) தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்படுமென இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய சினிமாவின் சிறந்த பின்னணி பாடகர்களில் ஒருவராக திகழும் லதா மங்கேஷ்கர், 1942 ஆண்டில் தனது 13 ஆவது வயதில் இசை வாழ்க்கையை தொடங்கினார். இந்தியாவின் 36 மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் அவர் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 07 தசாப்த கால இசை வாழ்க்கையில், பல்வேறு மறக்கமுடியாத கானங்களுக்கு தனது குரலால் உயிர் கொடுத்தவர் என்பதால், இந்தியாவின் 'மெலடி குயின்' என ரசிகர்களால் போற்றப்படுகிறார். பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாஹேப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை லதா மங்கேஷ்கர் தனதாக்கிக்கொண்டவர்.