by Staff Writer 18-01-2022 | 9:04 PM
Colombo (News 1st) புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த பிரிவுகள் ஒன்றிணைந்து கலந்துரையாடி, துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால் ஏப்ரல் 21 தாக்குதல்களை வெகுவாக தடுத்திருக்க முடியும் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி குழாம் முன்னிலையில் இன்று சாட்சியமளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்காமல் தமது பொறுப்புகளை மீறி செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று சாட்சியமளித்தார்.
முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸினால் சாட்சி விசாரணை வழிநடத்தப்பட்டது.
அரச புலனாய்வு பிரிவினால் கடந்த 2019 ஏப்ரல் 9 ஆம் திகதி அரச புலனாய்வு பிரிவு தலைவருக்கு வழங்கப்பட்டிருந்த தகவல், மேலிடத்தில் இருந்து கீழ்மட்டம் வரை அனைவருக்கும் வழங்கப்பட்ட மற்றுமொரு புலனாய்வுத் தகவலாக இருந்ததாக தேசபந்து தென்னகோன் இதன்போது குறிப்பிட்டார்.
அடிப்படைவாதிகள், மதத்தலங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்றலில் தாக்குதலொன்றை நடத்துவதற்கான திட்டம் தொடர்பிலான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், குறித்த அடிப்படைவாதிகளின் நிழற்படங்கள் இருக்கவில்லை என்பதால், தாம் உள்ளிட்ட தமக்கு கீழிருந்த அதிகாரிகளால் சந்தேகநபர்களை அடையாளங்காண முடியவில்லை என சாட்சியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சரியான தினம், காலம் என்பவற்றை தெரியப்படுத்திய சம்பவங்களை மாத்திரம் தடுப்பதற்கான இயலுமை மட்டுமா பொலிஸாருக்கு உள்ளது, அவ்வாறில்லாவிடில் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அதனை தடுப்பதற்கான இயலுமை பொலிஸாருக்கு இல்லையா என நீதிபதிகள் குழாம் சாட்சியாளர்களிடம் வினவியது.
இதற்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், இந்த தகவல்கள் சரியானவையல்லவென குறிப்பிட்டார்.
புத்தாண்டு விடுமுறையின் பின்னர் 2019 ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை தாம் விடுமுறையில் இருந்ததாகவும், தமக்கு கீழ் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனைகளை பின்தொடர்வதற்கு தமக்கு போதுமான காலம் இருக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.