வன்னியின் பெரும்போர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

by Staff Writer 16-01-2022 | 8:02 PM
Colombo (News 1st) 'வன்னியின் பெரும்போர்' என அழைக்கப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கும்  புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்குமிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று (16)  ஆரம்பமானது. கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. யோ. பிரவிந்தன் தலைமையில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணியும் தே. உதயநேசன் தலைமையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியும் இவ் வருட போட்டியில் களமிறங்கியுள்ளன. போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி மகா வித்தியாலய அணி தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதற்கமைய, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி 188 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. ம. தேனுஜன் 70 ஓட்டங்களையும் அ. சானுஜன் 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி சார்பில் பி. அவிஷாந்த் மற்றும் யோ. பிரவிந்தன் ஆகியோர் தலா 03 விக்கெட்களை கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸை தொடர்ந்த கிளிநொச்சி மகா வித்தியாலய அணி, 17.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்களை பெற்றிருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கு. சாத்வீகன் 30 ஓட்டங்களையும் அணித்தலைவர் யோ. பிரவிந்தன் 28 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர். போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை (17) தொடரவுள்ளது.