கட்டுநாயக்க விமான நிலையத்தில் வௌிநாட்டு பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வௌிநாட்டு பிரஜை கைது

by Staff Writer 10-01-2022 | 4:15 PM
Colombo (News 1st) போலி கடவுச்சீட்டில் அபுதாபி ஊடாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு செல்ல முற்பட்ட வௌிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் அபுதாபியில் இருந்து பாரிஸ் நகருக்குச் செல்லும் விமானத்தில் செல்வதற்காக அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். விமான பயணச்சீட்டை பெற்றுக்கொண்ட குறித்த சந்தேகநபர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் சமர்ப்பித்த சீஷெல்ஸ் தேசிய கடவுச்சீட்டு தொடர்பில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சந்தேகநபர் எல்லை கண்காணிப்பு பிரிவின் தொழில்நுட்ப ரீதியிலான பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் அங்கிருந்து தப்பிச்சென்று கூரையின் மீதேறி ஒளிந்துகொள்ள முயன்றுள்ளார். சந்தேகநபர் பதுங்கியிருந்த இடத்திற்கு விமானப்படையினர் அனுப்பப்பட்டு அவரை கைது செய்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.