by Staff Writer 31-12-2021 | 4:16 PM
Colombo (News 1st) அத்தனகல்ல - ஹூனுபொல வீதியில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 40 இலட்சம் ரூபாவினை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளும் கொள்ளைச் சம்பவங்களுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று போலியானது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தகரிடமிருந்து கொள்ளையிட்ட பணத்தில் 16 இலட்சம் ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஹூனுபொல வீதியிலுள்ள வர்த்தகரின் வீட்டிற்கு முன்பாக இந்த கொள்ளைச்சம்பவம் நேற்று (30) காலை இடம்பெற்றது.
இதன்போது, வர்த்தகரின் பணமும் கெப் வாகனமும் கொள்ளையர்களால் பறிக்கப்படும் காட்சிகள் அருகிலிருந்த CCTV கெமராவில் பதிவாகின.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.