மக்கள் கருத்துக்களை கேட்டறியும் ஜனாதிபதி செயலணி

மத்திய மாகாண மக்களின் கருத்துக்களை கேட்டறியும் 'ஒரே நாடு ஒரே நாடு' செயலணி

by Staff Writer 26-12-2021 | 3:43 PM
Colombo (News 1st) 'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. மாத்தளை மாவட்ட செயலகத்தில் நேற்று (25) முற்பகலும் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (25) பிற்பகலும் மத தலைவர்கள், தொண்டர் அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொழிற்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து தமது கருத்துக்களை பதிவு செய்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் முயற்சியை மக்கள் புரிந்துகொண்டுள்ளமையால் வழங்கப்பட்டுள்ள காலத்திற்கு முன்னர் தமது அறிக்கையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அங்கு வருகை தந்தவர்களிடம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். சிறிது காலம் தாமதமாகினாலும், அனைத்து மக்கள் பிரிவினருக்கும் நீதியை நிலைநாட்டவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான பரிந்துரைகளை சமர்பிப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற கொள்கையை அமுல்படுத்துவது தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளை சமர்பிக்குமாறு கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.