by Staff Writer 22-12-2021 | 8:41 PM
Colombo (News 1st) தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் மாநாட்டின் இறுதிக்கட்ட ஆவண நகல் இரண்டு பிரிவுகள் உள்ளடங்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவண நகலில் பாரத பிரதமருக்கான கடிதம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் 7 பிரதான பிரச்சினைகளின் பட்டியல் என்பன அடங்குவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
TELO கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த ஒருங்கிணைவு சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல எனவும் இது ஒரு தேர்தல் கூட்டணியும் அல்லவெனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில், இறுதி வடிவமான தமிழ் பேசும் கட்சிகள் சார்பான ஆவண நகல் தயாரிக்கப்பட்டு கட்சித் தலைவர்களின் இறுதி உடன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு '13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருதல்' என இருந்த நிலையில், தற்போது 'தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்' என மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதிய வரைவு தயாரிக்கப்பட்டபோது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரைபை அல்லது இதன் திருத்தத்தை கட்சிகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது கைச்சாத்திடப்படும் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.