by Staff Writer 21-12-2021 | 3:53 PM
Colombo (News 1st) COVID தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள கல்னேவ பகுதி அரிசி வர்த்தகர் ஒருவரின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படுவதை தடுக்கும் வகையில், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மக்கள் வங்கிக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
COVID தொற்று காரணமாக அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ள வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி சுற்றுநிரூபம் வௌியிட்டுள்ள நிலையில், அந்த சுற்றுநிரூபத்தை மீறும் வகையில், சொத்துக்களை எதிர்வரும் 30 ஆம் திகதி ஏலத்தில் விடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கல்னேவ - நேகம்பஹ பகுதியை சேர்ந்த அரிசி வர்த்தகர் சஞ்ஜீவ விஜேசுந்தர, சட்டத்தரணி அருண ரணசிங்க ஊடாக இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மனு தொடர்பில் ஒரு தரப்பு வாதங்களை கருத்திற்கொண்ட பிரதம நீதவான் அருண அளுத்கே, பிரதிவாதியான மக்கள் வங்கி சார்பில் ஜனவரி 4 ஆம் திகதி மன்றில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ள நிலையில், அதனை பொருட்படுத்தாது சொத்துக்களை ஏலத்தில் விற்பதற்கு மக்கள் வங்கி நடவடிக்கை எடுத்ததன் மூலம் மனுதாரருக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.