by Staff Writer 15-12-2021 | 8:44 PM
Colombo (News 1st) பாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி முடிவிற்கு கொண்டு வந்துள்ளதால், தற்போது விசேட நோக்கங்களுக்கான தெரிவுக்குழுக்கள் செயலிழந்துள்ளன.
பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை துரிதமாகவும் நீதியான முறையிலும் முன்னெடுப்பதற்கு ஏதுவாக விசேட நோக்கங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதே இந்த தெரிவுக்குழுக்களின் நோக்கமாகும்.
ஜனாதிபதி பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்கப்பட்டதால் செயலிழந்த குழுக்களில் அரசாங்க நிதி பற்றிய குழுவும் அடங்குகின்றது.
பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா அந்த குழுவின் தலைவராக செயற்பட்டார்.
பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல, சரத் வீரசேகர, சுசில் பிரேமஜயந்த, விதுர விக்ரமநாயக்க, டி.வி. சானக்க, நாலக்க கொடஹேவா, விஜித்த ஹேரத், டிலான் பெரேரா, குமார வெல்கம, ஹர்ஷ டி சில்வா, மனுஷ நாணயக்கார, எம்.ஏ. சுமந்திரன், காவிந்த ஜயவர்தன, முஜூபுர் ரஹ்மான், இசுரு தொடங்கொட, அநூப பெஸ்குவெல், நளின் பெர்னாண்டோ, சஹன் பிரதீப், பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் அந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
அரசாங்க நிதி தொடர்பிலான பல முக்கிய சம்பவங்கள் தொடர்பாக அண்மைக்காலமாக இந்த தெரிவுக்குழுவில் ஆராயப்பட்டுள்ளதுடன், சீனி வரி மோசடி இதில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு கிலோகிராம் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி 25 சதம் வரை குறைக்கப்பட்டதால், பெருமளவு சீனியை களஞ்சியத்தில் வைத்திருந்த நிறுவனத்திற்கு அதிக இலாபம் ஈட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இந்த வரிக்குறைப்பின் அனுகூலம் மக்களுக்கு கிடைக்கவில்லை என கடந்த மார்ச் மாதம் அரச நிதி பற்றிய குழுவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
தெரிவுக்குழு தொடர்ச்சியாக விடுத்த அறிவிப்புகளை அடுத்து நிதி அமைச்சு அறிக்கையொன்றை சமர்ப்பித்ததுடன், இந்த வரி திருத்தம் காரணமாக சுமார் 15,000 மில்லியன் ரூபாவை அரசாங்கம் இழக்க நேரிட்டமை இதன் மூலம் உறுதியானது.
இழக்க நேரிட்ட வருமானத்தை அரசாங்கம் பெற்றுக்கொண்டிருந்தால், அந்த பணத்தைக் கொண்டு எத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கலாம்?
COVID காரணமாக வருமானத்தை இழந்தவர்களுக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 8000 மில்லியன் ரூபாவை மாத்திரமே ஒதுக்கீடு செய்ய முடிந்தது.
ஓய்வூதிய முரண்பாடுகளை தீர்ப்பதற்கு 500 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டது.
போஷாக்கு பொதிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 1000 மில்லியன் ரூபாவாகும்.
சீனி வரி மோசடி தடுக்கப்பட்டிருந்தால், குறைந்தது இந்த நிவாரணங்களுக்கு மேலதிகமாக 15,000 மில்லியன் ரூபாவை சேர்த்திருக்கலாம் அல்லவா?
இந்த வௌிக்கொணர்வுகளை மேற்கொண்ட அரச நிதி பற்றிய குழு தற்போது செயலிழந்துள்ளது.