by Staff Writer 07-12-2021 | 1:07 PM
Colombo (News 1st) லிட்ரோ சமையல் எரிவாயு நிலையத்தின் களஞ்சியசாலையை இடமாற்ற கோரி யாழ்ப்பாணத்தில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். கொட்டடி பகுதியில் அமைந்துள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர் நிலையத்துக்கு முன்பாக இன்று முற்பகல் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு கசிவு, தீப்பற்றும் சம்பவங்கள் பதிவாகும் நிலையில், தங்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் எரிவாயு சிலிண்டர்களின் களஞ்சியசாலையை இடமாற்ற வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களின் கோரிக்கை தொடர்பில் யாழ். வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்துரையாடியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட முயற்சிக்கப்பட்ட போதிலும், அந்த முயற்சிகள் பயனளிக்கவில்லை என நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எரிவாயு வெடிப்பு தொடர்பில் நிறுவனங்கள் தமது பொறுப்பை புறக்கணித்திருந்தால், சாத்தியமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.