விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி இடைநிறுத்தம்

by Staff Writer 02-12-2021 | 8:59 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள குழியில் மழை நீர் நிரம்பியுள்ளதால், அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர். அதற்கமைய, நாளை (03) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர். போர்ச்சூழலில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தங்கம் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியில் இன்று பகல் 2 மணியளவில் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மாலை 05 மணி வரை அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். முல்லைத்தீவு நீதவான், பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு இன்று சென்றிருந்தனர். இதேவேளை, ​போர்ச்சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை இரகசியமாக தோண்டியெடுப்பதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றவர்களில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஒருவரும் அடங்குகின்றார்.