by Staff Writer 01-12-2021 | 8:42 PM
Colombo (News 1st) எரிவாயு கலவை (composition) மாற்றத்திற்கு அமைவாக சீராக்கி ( regulator) உள்ளிட்ட உபகரணங்களும் வலுப்படுத்தப்படாவிட்டால் வெடிப்பதற்கான சாத்தியம் உள்ளதென்பதே நிபுணர்களின் நிலைப்பாடு என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இன்று தெரிவித்தார்.
எரிவாயு விபத்துகள் தொடர்பான வர்த்தக அமைச்சின் துறைசார் மேற்பார்வை தெரிவுக்குழுவின் விசேட கூட்டத்தை அடுத்தே இராஜாங்க அமைச்சர் இதனை கூறினார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்த விசேட கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் நடைபெற்ற துறைசார் மேற்பார்வை தெரிவுக்குழுக் கூட்டத்திற்கு இரண்டு எரிவாயு நிறுவனங்களினதும் பிரதிநிதிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், எரிவாயு தொடர்பிலான நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி நியமித்த குழு இரண்டு வாரங்களில் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் எரிவாயுவை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்னர் தொடர்புடைய அரச நிறுவனங்கள் கப்பலுக்கு சென்று எரிவாயுவின் தரம் தொடர்பில் பரிசோதிப்பதற்கும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
LG சமையல் எரிவாயுவிற்காக பயன்படுத்தப்படும் தரமற்ற சீராக்கி, குழாய் மற்றும் அடுப்பு பாவனையின் போதான கவனயீனமே அண்மையில் பதிவாகும் சம்பவங்களுக்கு காரணம் என லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று பத்திரிகைகளில் கட்டணம் செலுத்தி பிரசுரித்துள்ள விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைமனு கோரல் மூலமே சமையல் எரிவாயு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து சமையல் எரிவாயு சிலிண்டர்களும் GEO-CHEM Lanka (PVT) Ltd நிறுவனத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய சுமார் 13 சம்பவங்கள் தொடர்பாக தகவல் கிடைத்தது.
நேற்றும் 14 விபத்துகள் பதிவானதுடன் நேற்று முன்தினமும் எரிவாயு வெடித்த 6 சம்பவங்கள் இடம்பெற்றன.
? பண்டுவஸ்நுவர, ஹித்தரபொல பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் ஒருவர் காயமடைந்து இன்று முவன்ஹெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
? கண்டி - குண்டசாலை நத்தரம்பொத்த பகுதியிலுள்ள வீட்டில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ காரணமாக பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் வீட்டில் தீ பரவியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
? கண்டி - அக்குரணை மெங்கூஸ் தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றிலும் எரிவாயு அடுப்பு வெடித்தது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை
? நுவரெலியா - நானுஒயா நகரிலுள்ள உணவகமொன்றின் சமையல் அறையில் இருந்த எரிவாயு அடுப்பு நேற்றிரவு வெடித்தது.
? இன்று அதிகாலை 4.30 அளவில் வலஸ்முல்ல - ஹக்மன வீதியிலுள்ள வீடொன்றிலும் எரிவாயு அடுப்பு வெடித்தது.
? இதேவேளை, ஹங்கம - எத்பட்டுவ பகுதியிலுள்ள வீட்டில் நேற்றிரவு 8.30 அளவில் எரிவாயு அடுப்பு வெடித்தது.
? மிஹிந்தலை நகரில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு உணவு சமைத்ததன் பின்னர் அடுப்பு வெடித்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
? இதேவேளை, தம்புளை - லெனதொர மெனிக்தென பகுதியில் எரிவாயு கசிவு காரணமாக இன்று அதிகாலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பின்னர் சிலிண்டரை பரிசோதித்த போது அதிலிருந்து எரிவாயு கசிகின்றமை தெரியவந்தது.
? களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் பலாத்தோட்ட தேக்கவத்தை பகுதியிலும் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
? பாணந்துறை - எழுவில சம்சுதீன் வீதியிலும் எரிவாயு வெடிப்புச் சம்பவம் பதிவானது
? அம்பலாங்கொடை - கொட்டஹேன பகுதியிலுள்ள மூன்று மாடி வீட்டிலும் இன்று எரிவாயு அடுப்பு வெடித்தது.
? தலவாக்கலை - நியூ காலனி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் இன்று காலை பதிவானது.
? கிண்ணியா இடிமன் பிரதேசத்தில் இன்று காலை எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டவில்லை.
? யாழ்ப்பாணம் - சித்தங்கேணி பகுதியிலும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
? கொட்டகலை - பத்தனை பெய்திலி தோட்டத்தில் தொழிலாளர் குடியிருப்பு ஒன்றிலும் எரிவாயு அடுப்பின் சீராக்கி நேற்று மாலை வெடித்தது. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் சமையல் அறையில் எவரும் இருக்கவில்லை என வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை காண முடிந்தது.
எனினும் இன்று குறித்த பகுதிகளில அவ்வாறான நிலைமையை காண முடியவில்லை.
இதேவேளை, சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய சுயதொழிலாளர் வர்த்தக சங்கத்தினர் இன்று லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சென்றிருந்தனர். எனினும், அலுவலகத்தின் கதவு மூடப்பட்டிருந்தமையினால் எவருக்கும் உள்ளே செல்ல முடியவில்லை. பின்னர் அவர்கள் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து அவ்விடத்திற்கு பொலிஸார் சென்று, லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவரிடம் மஹஜர் ஒன்றை கையளிக்க சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.