by Bella Dalima 27-11-2021 | 3:46 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள B.1.1.529 COVID-19 பிறழ்விற்கு Omicron என பெயரிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் புதிய பிறழ்விற்கு Omicron என பெயரிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் COVID-19 தொழில்நுட்பக்குழுவின் அவசர திட்டமிடல் தலைமை அதிகாரி Maria Van Kerkhove தெரிவித்துள்ளார்.
Omicron பிறழ்வு உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள டெல்டா, ஆல்ஃபா, கமா மற்றும் பீட்டா என்பவற்றை விடவும் இருமடங்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Omicron பரவுவதை தடுக்கும் நோக்கில் பல்வேறு நாடுகளினாலும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே COVID-19 தொற்றினால் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள சர்வதேசம், தற்போது பொருளாதார மீளெழுச்சி பாதையை நோக்கி செல்லும் போது, தற்போதைய பிறழ்வு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19 தடுப்பூசிகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு மத்தியில், தற்போதைய Omicron பிறழ்வின் பரவும் தன்மை, தீவிரத்தன்மை அல்லது தாக்கங்கள் என்பன தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை அறிவிப்பதற்கு இன்னும் 02 வாரங்கள் தேவைப்படலாமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
புதிய COVID-19 பிறழ்வு தென்னாபிரிக்காவில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டது.
இதனையடுத்து, பிரித்தானியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உடனடியாக தென்னாபிரிக்கா மற்றும் அண்டைய நாடுகளில் இருந்து வருகை தரும் விமானங்களை தடை செய்துள்ளன.
தென்னாபிரிக்காவில் Omicron பிறழ்வு அடையாளம் காணப்பட்டதையடுத்து அமெரிக்காவும் பயணக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
தென்னாபிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளான பொட்ஸ்வானா, சிம்பாப்வே, நமீபியா, லெசெதோ, எஸ்வாடினி, மொஸாம்பிக் மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கும் இந்த தடையுத்தரவு பொருந்துமென அமெரிக்கா அறிவித்துள்ளது.
குறித்த நாடுகளிலிருந்து அமெரிக்க பிரஜைகள் மாத்திரம் நாட்டிற்கு வருகை தருவதற்கு நாளை மறுதினம் (29) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற பயணத் தடையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கனடாவும் ஏற்கனவே பிற்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், Omicron பிறழ்விற்கு எதிரான தடுப்பூசியை 100 நாட்களில் தயாரிப்பதாக Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
Omicron-க்கு எதிராக தமது தடுப்பூசி செயல்படுமா என்பதை உறுதி செய்ய முடியாதென இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் Omicron திரிபு தொடர்பில் கூடுதல் தரவை எதிர்பார்ப்பதாக Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் கூறியுள்ளன.
இதனிடையே, Omicron கவனம் செலுத்தப்பட வேண்டிய திரிபென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆரம்பகால ஆதாரங்களின் அடிப்படையில், இது வேகமாக பரவும் அபாயம் கொண்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் இயல்பு காரணமாக ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் நோய் தொற்றுவதற்கான அபாயம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு தென்னாபிரிக்காவிலிருந்து வருகை தந்த 02 விமானங்களில் 61 பேருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு Omicron பிறழ்வு தொற்றியுள்ளதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகள் நடத்தப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்னாபிரிக்காவிலிருந்து நெதர்லாந்திற்கு குறித்த 02 விமானங்களில் 600 பேர் பயணித்துள்ளனர்.