ஏப்ரல் 21 தாக்குதல்: வழக்கு விசாரணை அடுத்த வருடம்

ஏப்ரல் 21 தாக்குதல்: 12 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை 2022 மார்ச் 14 ஆம் திகதி ஆரம்பம்

by Staff Writer 16-11-2021 | 4:20 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்கத் தவறியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையை அடுத்த வருடம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. அருட்தந்தை சரத் இத்தமல்கொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த 12 அடிப்படை உரிமை மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ, எல்.டி.பி.தெஹிதெனிய, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய 7 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் மன்றுக்கு அறிவித்துள்ளனர். முஸ்லிம் அடிப்படைவாதிகள் அல்லது வேறு அடிப்படைவாதிகளால் தாக்கல் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்தும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்ட அரச புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் , அப்போதைய ஆட்சியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு எழுத்தாணை பிறப்பிக்கக் கோரி இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.