மஹேல ஜயவர்தனவிற்கு Hall of Fame கௌரவம்

மஹேல ஜயவர்தனவிற்கு Hall of Fame கௌரவம்

by Bella Dalima 13-11-2021 | 7:34 PM
Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் Hall of Fame கௌரவத்திற்குரிய வீரராக இலங்கையின் மஹேல ஜயவர்தன இன்று (13) அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவரும், வேகப்பந்து வீச்சாளருமான Shaun Pollock மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான Janette Brittin ஆகியோரும் Hall of Fame விருதிற்கு பெயரிடப்பட்டுள்ளனர். 1997 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மஹேல ஜயவர்தன 2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் இலங்கையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச்சென்ற அணித்தலைவராவார். மஹேல ஜயவர்தன 149 டெஸ்ட் போட்டிகளில் 11,814 ஓட்டங்களையும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 12,650 ஓட்டங்களையும் குவித்து இலங்கையின் பல வெற்றிகளுக்கு பங்களித்துள்ளார். இதேவேளை, தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான Shaun Pollock 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 421 விக்கெட்களையும் 3,781 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.   டெஸ்ட் போட்டிகளில் 400-க்கும் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியதுடன், அதிகளவான ஓட்டங்களையும் குவித்த வீரர்கள் பட்டியலில் Shaun Pollock இரண்டாவது இடத்திலுள்ளார். 1979 தொடக்கம் 1998 வரை 27 டெஸ்ட் போட்டிகளிலும் 63 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி Janette Brittin விளையாடியுள்ளார்.   அதிக மகளிர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவராகவும் அதிக ஓட்டங்களையும் அதிக சதங்களையும் குவித்தவராகவும் இவர் பதிவாகியுள்ளார். இவர் தமது 58 ஆவது வயதில் 2017 ஆம் ஆண்டு புற்றுநோயால் காலமானார். இறந்த பின்னரும் Hall of Fame விருதிற்கு பாத்திரமாகியுள்ளார்.