அப்பாவி மக்கள் எவ்வாறு வாழ்வது: பாராளுமன்றில் ஹர்ஷ டி சில்வா கேள்வி

by Bella Dalima 13-11-2021 | 10:10 PM
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (13) ஆரம்பமானது. எதிர்க்கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று விவாதத்தை ஆரம்பித்தார். இதன்போது, வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகையைக் குறைப்பதற்கு ஒரு யோசனையேனும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார். அத்தியாவசியப் பொருட்களின் விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளதால், அப்பாவி மக்கள் எவ்வாறு வாழ்வது எனும் கேள்வியை அவர் முன்வைத்தார். சேதனப் பசளை என கூறிக்கொண்டு மலத்தை இறக்குவதற்கு கப்பலொன்று காத்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், ஆசிரியர்களுக்கும் தாதியர்களுக்கும் சம்பளம் வழங்க பணமில்லை என கூறிய அரசாங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்காக 8500 கோடி ரூபாவை வெட்கமின்றி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். கடத்தற்காரர்களுக்கு நெருக்கமானவர்களுக்கே தற்போது சிறந்த காலம் உதயமாகியுள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா கூறினார்.