by Staff Writer 06-11-2021 | 7:26 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த 02 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் - முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையிலேயே, நேற்று (05) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது பேசியதாகவும் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஒற்றுமையாக கையாள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார்.
அனைத்து மக்களும் தங்களது இறைமையை பயன்படுத்தக்கூடிய வகையில், அதிகாரங்கள் பகிந்தளிக்கப்பட்டு அவர்கள் ஒற்றுமையாக ஒருமித்து வாழ வேண்டும் என என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக அமைந்ததாகவும் இந்த செயற்பாடுகள் தொடரும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியூஸ்பெஸ்ட்டுக்கு மேலும் தெரிவித்தார்.