by Chandrasekaram Chandravadani 03-11-2021 | 1:23 PM
உயர்திமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கு ஆஜராக முடியாது என உயிர்த்த ஞாயிறு தாக்கல் தொடர்பிலான தேசியப் பேச்சாளர் குழுவின் உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
இன்று காலை 9.30 அளவில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அருட்தந்தைக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற இணையத்தள மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்கத்திடம் முறையிட்டிருந்தார்.
2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச சட்டத்தின் மூன்று ஒன்று, மூன்று இரண்டு சரத்துக்களின் பிரகாரமும், தண்டனை சட்டக் கோவையின் பல சரத்துக்களின் கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவுக்கு அறிவித்திருந்தது.
இந்த விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, ஒக்டோபர் 28 ஆம் திகதி முன்னிலையாகுமாறு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவு, அருட்தந்தைக்கு அறிவித்திருந்தது.
எனினும் அருட்தந்தை சிறில் காமினி அதற்காக ஒருவார கால அவகாசம் கோரியிருந்தார்.
இதனடிப்படையில் இன்று காலை 9.30 க்கு வருகை தருமாறு மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களம் மீண்டும் அருட்தந்தைக்கு அறிவித்த நிலையில், உயர்திமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்,
சட்டத்தரணியூடாக எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளார்.
இதனால் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக முடியாது என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
வாக்குமூலம் பெறுவதற்காக அழைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தம்மை கைதுசெய்ய எடுக்கும் முயற்சியை தடுக்கும் தடையுத்தரவை வழங்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை நேற்று தாக்கல் செய்தார்.
மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறக்குமாறும் அருட்தந்தை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.